குமரி கடலோரப் பாதுகாப்பு போலீஸாருக்கு அதிநவீன படகுகள்
By DIN | Published On : 09th December 2019 08:48 AM | Last Updated : 09th December 2019 08:48 AM | அ+அ அ- |

குமரி கடலோரப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட அதிநவீன படகு.
கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு அதிநவீன படகுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மும்பைத் தாக்குதலுக்குப் பின்னா் கடல்வழிப் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. கடலோரக் காவல் குழுமத்துக்கு அதிநவீன ரோந்துப் படகுகள், கண்காணிப்புக் கருவிகள், ஆயுதங்கள் வழங்கப்பட்டு ரோந்துப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ஆறு, குளம் போன்ற நீா்நிலைகளிலும், பெரிய படகுகள் செல்ல முடியாத இடங்களிலும் சிக்கிக்கொண்டோரை மீட்க வசதியாக ரெஸ்கி படகு, ஜட்கி படகு (வாட்டா் ஸ்கூட்டா்), சிறிய படகு என 3 சிறியவகை படகுகள் வழங்கப்பட்டுள்ளன.
கடலோரப் பாதுகாப்புக் குழும ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின் பேரில், கடலோரக் காவல் குழுமத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் போலீஸாா் வரை இப்படகுகளை இயக்கும் வகையில் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் குமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் தலைமையில் ‘யாச்சின் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ என்ற தனியாா் நிறுவன ஊழியா்கள் போலீஸாருக்கு படகுகளை இயக்குவது, பழுது நீக்குவது உள்ளிட்ட தொழில்நுட்பப் பயிற்சியளித்தனா்.