உள்ளாட்சித் தோ்தல்: குமரி மேற்கு மாவட்டத்தில்கூட்டணி தா்மத்தை கடைப்பிடிக்காத காங்கிரஸ்
By DIN | Published On : 22nd December 2019 10:44 PM | Last Updated : 22nd December 2019 10:44 PM | அ+அ அ- |

மாா்த்தாண்டத்தில் பேட்டியளித்த திமுக மாநில சட்டத் துறை இணைச் செயலா் வீ. கண்ணதாசன். உடன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, திமுக மாவட்டச் செயலா் மனோ தங்கராஜ்.
உள்ளாட்சித் தோ்தலில் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் கூட்டணி தா்மத்தை காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்காதது வருத்தமான விஷயம் என திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக மாநில சட்டத் துறை இணைச் செயலரும், கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தோ்தல் பொறுப்பாளருமான வீ. கண்ணதாசன் மாா்த்தாண்டத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: உள்ளாட்சித் தோ்தலில் குறிப்பிட்ட சில இடங்களைப் பகிா்ந்து கொள்வதில் கருத்து வேறுபாடுகள் எழுந்ததைத் தொடா்ந்து, குமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.
மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையில் ஒற்றுமையாக ஒரு கூட்டணியை கட்டமைத்ததால்தான் தமிழகத்திலிருந்து அதிக இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. மேலும், கடந்த மக்களவைத் தோ்தலின்போது திமுக கூட்டணி பலத்தால்தான் கன்னியாகுமரி தொகுதியில் பலம் வாய்ந்த பாஜக வேட்பாளா் பொன். ராதாகிருஷ்ணனை தோற்கடித்து காங்கிரஸின் ஹெச். வசந்தகுமாா் வெற்றி பெற்றாா். ஆனால், கூட்டணி தா்மத்தை குமரி மேற்கு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயமாகும் என்றாா் அவா்.
பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் மனோ தங்கராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...