களியக்காவிளை பேருந்து நிலைய விரிவாக்கப் பணி தொடக்கம்
By DIN | Published On : 12th February 2019 04:42 AM | Last Updated : 12th February 2019 04:42 AM | அ+அ அ- |

களியக்காவிளை பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது களியக்காவிளை. இங்குள்ள சந்தையின் ஒரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரமாக 1989 இல் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்தில் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோதமங்கலம், இடுக்கி, திருவனந்தபுரம், பூவார், நெடுமங்காடு, விழிஞ்ஞம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கேரள அரசு பேருந்துகளும், சென்னை, திண்டுக்கல், சேலம், வேளாங்கண்ணி, மதுரை, குமரி, திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் களியக்காவிளை சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, பேருந்து நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதனிடையே, பேருந்து நிலைய விரிவாக்கம் செய்ய ரூ. 3 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்தது.
பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள், வரைபடம் தயாரித்தல் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, பேருந்து நிலையத்தை அடுத்துள்ள காய்கனி சந்தையில் குறிப்பிட்ட இடத்தையும் சேர்த்து விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்டமாக பேருந்து நிலையம்-காய்கனி சந்தைக்கு இடையே உள்ள சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது. மேலும் சந்தைப் பகுதியில் மேடாக காட்சியளிக்கும் மண் திட்டுகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மண்ணை அகற்றி சமன்படுத்தியதும் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.