சுடச்சுட

  

  கடனளிப்பில் பிரச்னை: குறுமத்தூர் கூட்டுறவில் உறுப்பினர்கள் எதிர்ப்பு

  By DIN  |   Published on : 13th February 2019 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  களியக்காவிளை அருகேயுள்ள குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, தலைவருக்கு எதிராக உறுப்பினர்கள்  திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  இக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சங்கத் தலைவர் சுரேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. துணைத் தலைவர் லைலா ரவிசங்கர் மற்றும் 9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
  கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் 251 பேருக்கு விவசாயக் கடன் வழங்குவது, மாடு வாங்க கடன், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன், தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்குவது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
  இதில், சங்கத் தலைவர் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே மகளிர் சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்குவதாகவும், துணைத் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கு கடன் வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினர். தொடர்ந்து கூட்ட தீர்மான புத்தகத்தில் தீர்மானங்களை அங்கீகரித்து கையெழுத்திட நிர்வாக குழு உறுப்பினர்கள் 6 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கடன் வழங்குவதில் சங்கத் தலைவர் பாரபட்சம் காட்டுவதாக கூறி சங்க அலுவலகம் முன் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
  இதைத் தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகனஅய்யர் தலைமையில் போலீஸார் வந்து சங்கத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பேச்சு நடத்தினர். ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், விவசாய கடன் தொடர்பான தீர்மானம் மட்டும் அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து, எதிர்தரப்பு நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடம் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்று அவர்களுக்கும் மகளிர் சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படும் என போலீஸார் முன்னிலையில் தலைவர், செயலாளர் ஆகியோர் உறுதி கூறியதையடுத்து நிர்வாக குழு உறுப்பினர்கள் சமரசமாகினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai