சுடச்சுட

  

  குமரிக்குள் அத்துமீறல்: மீன்கழிவு லாரியை கேரளத்துக்கு திருப்பி அனுப்பிய போலீஸார்

  By DIN  |   Published on : 13th February 2019 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு மீன் கழிவுகளுடன் வந்த கண்டெய்னர் லாரியை போலீஸார் குழித்துறை அருகில் மடக்கிப் பிடித்து கேரளத்துக்கு திருப்பி அனுப்பினர்.
  கேரளத்தில் மீன், இறைச்சிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்து லாரி, மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் கழிவுப் பொருள்களை ஏற்றி, குமரி மாவட்டத்துக்கு கொண்டு வந்து இங்குள்ள சாலையோரங்கள், நீர்நிலைகளில் கொட்டிச் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீர்கேடுகளும் ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது.
  இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கேரளத்திலிருந்து களியக்காவிளைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. சோதனைச் சாவடியில்  அந்த லாரியை போலீஸார் நிறுத்த முயன்றபோது, அது நிற்காமல் சென்றதாம். இதையடுத்து, களியக்காவிளை காவல் நிலையத்துக்கும், படந்தாலுமூடு சோதனைச் சாவடிக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர். 
  அந்த லாரி படந்தாலுமூடு சோதனைச் சாவடியிலும் நிற்காமல் சென்றுள்ளது.
  இதையடுத்து அங்கு பணியில் இருந்த 2 காவலர்கள் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று, லாரியை குழித்துறை அருகேயுள்ள கல்லுக்கட்டி பகுதியில் மடக்கிப் பிடித்து, களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தினர். 
  இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் சொர்ணலதா, உதவி ஆய்வாளர் மோகனஅய்யர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கழிவு லாரியை அங்கிருந்து கேரளப் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தினர். இது தொடர்பாக லாரி ஓட்டுநரான கேரளத்தின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ரகுமான் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai