சுடச்சுட

  

  குமரியில் இலவங்காய் சீசன் தொடக்கம்: கொள்முதலுக்கு வணிகர்கள் முகாம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டத்தில் இலவங்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில்,  பழங்குடி  மக்கள் இலவங்காய்களை அறுவடை செய்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். 
  இலவம் பஞ்சில் துயில் என்பது முதுமொழி. நிம்மதியான தூக்கத்துக்கு இலவம் பஞ்சை அடைத்து செய்யப்பட்டு தலையணை மற்றும் மெத்தைகளை மக்கள் பயன்படுத்துவது நீண்ட நெடுங்காலமாக  வழக்கத்தில் உள்ளது.  பருத்தி மற்றும் ரப்பரினால் தயாரிக்கப்பட்ட மெத்தை, தலையணைகளின் வரத்து அதிகமாக இருந்தாலும் மக்களின் முதல் தேர்வு இலவம் பஞ்சில் தயாரிக்கப்பட்ட மெத்தை, தலையணைகளாகத் தான் இருந்து வருகிறது. 
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவு மரங்கள் வளர்வதற்கான கால நிலை உள்ளது. இலவு மரக் குச்சிகளை மண்ணில் ஊன்றி விட்டால் அது தானாக வளர்ந்து மரமாகிவிடும் என்ற நிலையில் முன்காலங்களில் சாலையோரங்களில் இலவு மரங்கள் அதிக அளவில் காணப்பட்டன.
  தற்போதைய நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப மரங்களின் பயன்பாடு மாறியுள்ளதால், சாலையோரம் அத்தகைய மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், முன்காலங்களில் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் தரிசாகக் கிடக்கும் நிலங்களிலெல்லாம் இலவு மரங்கள் காணப்பட்டன.  இன்றைய சூழ்நிலையில், இலவங்காய் பறிப்புக் கூலி உள்ளிட்ட காரணங்களால் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் தரிசு நிலங்களில் இலவு மரங்கள் வளர்ப்பது அருகி வருகிறது.
  தமிழகத்தைப் பொருத்த வரையில், தேனி மாவட்டம், போடி, கம்பம், பெரியகுளம்,  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இலவு மரங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் இலவம் பஞ்சைப் பயன்படுத்தி மெத்தை, தலையணை தயாரிக்கும் ஏராளமான ஆலைகளும் உள்ளன.
  அதற்கு அடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையை மையமாகக் கொண்ட மலைப் பகுதிகளில் அதிக அளவில் இலவு மரங்கள் உள்ளன.
  பழங்குடிகளுக்கு வருவாய்: குறிப்பாக, மலைப்பகுதிகள் மற்றும் காடுகள் வசிக்கும் பழங்குடி மக்கள் தங்களின் நிலங்களில் அதிக அளவில் இலவு மரங்களை நடவு செய்துள்ளனர். இலவங்காய் சீசன் காலத்தில் பழங்குடி மக்கள் உலர்ந்த இலவங்காய்களை விற்பனை செய்து வருவாய் பெறுகின்றனர். தற்போது  புது இன ஒட்டு இலவு மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இவைகளிலிருந்து திரட்சியான இலவங்காய்கள் கிடைக்கின்றன. இவை காய் ஒன்றிற்கு ரூ. 1 க்கும் அதிகமான விலை கிடைக்கிறது. 
  மாவட்டத்தில் பேச்சிப்பாறை, சுருளகோடு, கீரிப்பாறை, ஆறுகாணி, அருமனை  என பரவலாக  ஏறக்குறைய ஒரு கோடி இலவங்காய்கள் வரை ஆண்டொன்றுக்கு  அறுவடையாகின்றன. இதன் மூலம் ரூ. 1 கோடி வரை இதில் வர்த்தகம் நடைபெறும் என மதிப்பிடப்படுகிறது. இலவங்காய் அறுவடையின்போது, காய் பறிக்கும் தொழிலாளர்கள், சரக்கு வாகன பயன்பாடு என பல வகையான மறைமுக தொழில்கள் நடைபெறுகின்றன.
  போடிக்கு ஏற்றுமதி: குமரி மாவட்டத்தில் அறுவடையாகும் இலவங்காய்களில் 90 சதம் வரை தேனி மாவட்டம் போடி, கம்பம், பெரியகுளம் பகுதிகளில் உள்ள மெத்தை, தலையணை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக அங்கிருந்து வணிகர்கள் குலசேகரம் வந்து முகாமிட்டு இலவங்காய்களை வாங்கிச் செல்கின்றனர். இது தவிர கேரள மாநிலம் ஓலத்தாணி என்ற இடத்திலுள்ள மெத்தை, தலையணை ஆலைகளுக்கும்  இலவங்காய்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
  ஒக்கி புயலால் பாதிப்பு: கடந்த 2017 ஆம் ஆண்டு  நவம்பர்  மாதம் 30 ஆம் தேதி  வீசிய ஒக்கி புயல் காரணமாக பேச்சிப்பாறையை மையமாகக் கொண்ட பகுதிகளில் ஏராளமான இலவு மரங்கள் சாய்ந்த நிலையில், இலவு மரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பழங்குடி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  மேலும், அண்மை காலமாக இந்தோனேசியாவிலிருந்து இலவம் பஞ்சு மற்றும் இலவம் பஞ்சினால் தயாரிக்கப்பட்ட மெத்தை, தலையணைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மெத்தை, தலையணைகள் கடும் போட்டியை சந்திக்க வேண்டியுள்ளது என்றும்,  இலவம் காய்கள் மற்றும் பஞ்சிற்கு விலை குறைவாகவே கிடைக்கிறது என்றும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai