சுடச்சுட

  

  கோவையிலிருந்து குமரிக்கு வந்த ஆதியோகி ரதம்: மக்கள் வரவேற்பு

  By DIN  |   Published on : 13th February 2019 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஆதியோகி ரதத்துக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  கோவை மாவட்டம், ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 25 ஆவது மஹா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4 ஆம் தேதி 112 அடி ஆதியோகி சிலை முன்பு கொண்டாடப்பட உள்ளது. 
  இவ்விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவின் அருளுரை, நள்ளிரவு தியானம், கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும், ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சம் மற்றும் சர்ப்ப சூத்திரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
  இந்நிலையில், கோவையில் இருந்து இம்மாதம் 1ஆம் தேதி புறப்பட்ட ஆதியோகி ரதம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்தது. பொதுமக்கள் ஆதியோகி ரதத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முப்பந்தல், ஆரல்வாய்மொழி, தோவாளை, லாயம்விலக்கு, செண்பகராமன் புதூர், தாழக்குடி, சீதப்பால், பூதப்பாண்டி, இறச்சகுளம், புத்தேரி, எஸ்.எம்.ஆர்.வி பள்ளி ஆகிய இடங்களுக்கு ஆதியோகி ரதம் சென்றது.
  இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வடசேரி சிவன் கோயில், கிருஷ்ணன் கோயில், வடிவீஸ்வரம், டிவிடி பள்ளி, நாகர்கோவில் ஈஷா வித்யா பள்ளி, இரவிபுதூர், மயிலாடி, சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஆதியோகி ரதம் ஊர்வலமாகச் சென்றது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
  இந்த ரதம் பெருவிளை, ஆசாரிப்பள்ளம், வல்லன் குமாரன்விளை, தெங்கம்புதூர், ஈத்தாமொழி உள்ளிட்ட இடங்களுக்கு  புதன்கிழமை  செல்கிறது. பிப். 17  ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிடும். பின்னர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மார்ச் 3 ஆம் தேதி மீண்டும் கோவையை அடைகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai