"படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

குமரி மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற   விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற   விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ.காளிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ஆம் வகுப்பு தோல்வி மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.1.2019 முதல் 31.3.2019ஆம் தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இந்த உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 31.12.2018  அன்று  5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். வயதுவரம்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதும், மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும் 40 வயதும் நிறைவடையாமல் இருக்க வேண்டும். 
மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை 31.12.2018 தேதியில் பதிவுசெய்து ஓராண்டு முடிவுற்றிருந்தாலே போதுமானது. மேலும் அவர்களுக்கு வயது மற்றும் வருமான  உச்சவரம்பு  ஏதுமில்லை. 
பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் அலுவலக வேலைநாள்களில், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து இலவசமாக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேமிப்புக்கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பிப்ரவரி மாத இறுதிக்குள் அளிக்க வேண்டும். 
ஏற்கெனவே விண்ணப்பித்து உதவித்தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் விண்ணப்பம் அளிக்கத் தேவையில்லை. உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இதர பதிவுதாரர்களுக்கு பள்ளியிறுதி வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு  ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையை 3 ஆண்டுகள் தொடர்ந்து பெற வேண்டுமானால் அவர்கள் சுயஉறுதிமொழி ஆவணத்தை ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும்.
தொழில் படிப்பு படித்த பதிவுதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com