குமரி மாவட்டத்தில் ஆமை குஞ்சு பொரிப்பு சீசன் தொடக்கம்: 86 குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
By DIN | Published On : 20th February 2019 05:53 AM | Last Updated : 20th February 2019 05:53 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆமை குஞ்சு பொரிப்பு சீசன் தொடங்கியுள்ளது. இதுவரை சேகரிக்கப்பட்ட 86 கடல் ஆமை குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை கடலில் விடப்பட்டன.
கடல் ஆமை இனங்களின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அழிந்துவரும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் வகையில் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு வனத் துறையினர் மூலம் முட்டைகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
இம்மாவட்டத்தில் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான ராஜாக்கமங்கலம் துறை, ஆயிரங்கால் பொழிமுகம், அழிக்கால், தெக்குறிச்சி, சொத்த விளை, வீரபாகு பதி போன்ற கடற்கரைப் பகுதிகளை வனத் துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் அவைகள் இடும் முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொரிக்கும் வகையில் கடற்கரைகளில் முட்டை பொரிப்பகம் அமைத்து குழி தோண்டி புதைத்து வைத்து அவை பொரிந்தவுடன் கடலில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வனச்சரகர் புஷ்பராஜா தலைமையிலான வன ஊழியர்கள் திலீபன், பூபதி, ராஜன், ராஜேந்திரன் குழுவினர், கடந்த ஜன. 2ஆம் தேதிமுதல் சேகரிக்கப்பட்ட 2,533 கடல் ஆமை முட்டைகளை கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முட்டை பொரிப்பகத்தில் பல்வேறு குழிகளில் புதைத்து வைத்து அவற்றை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் தெக்குறிச்சி தென் பாற்கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குழியில் 112 முட்டைகள் இருந்ததில் 86 குஞ்சுகள் பொரிக்கப்பட்டிருந்தன. அவற்றை மாவட்ட வன அலுவலர் ஆனந்த் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கடலில் விட்டார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, பயிற்சி ஆட்சியர் பிரதிக்தயாள், சார்-ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவனர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.