முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பள்ளி மாணவிகள் தாழக்குடியில் திடீர் மறியல்
By DIN | Published On : 28th February 2019 06:05 AM | Last Updated : 28th February 2019 06:05 AM | அ+அ அ- |

நாகர்கோவில் அருகேயுள்ள தாழக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்களை ஜாதி பெயரைச் சொல்லி தரக்குறைவாக பேசியதாக தலைமை ஆசிரியையைக் கண்டித்து, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாழக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப் பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவிகளை ஜாதி பெயர் சொல்லி தரக்குறைவாக பேசி வருவதாக மாணவிகள் தரப்பில் புகார் கூறி வந்தனராம்.
இந்நிலையில், புதன்கிழமை மாணவிகள் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்து தலைமை ஆசிரியையைக் கண்டித்து அவரது அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவிகளின் உறவினர்களும், ஊர்மக்களும் கலந்து கொண்டனர்.
பின்னர், மாணவிகளுடன் ஊர் மக்களும் சேர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. மாணவிகள் நடத்திய சாலை மறியலால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளும், கல்வித்துறையினரும் மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன்பேரில் மறியல் கைவிடப்பட்டது.