சுடச்சுட

  

  ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்தை தவிர்க்கலாம்:  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பேச்சு

  By DIN  |   Published on : 12th January 2019 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால்  சாலைவிபத்துகளை தவிர்க்கலாம் என்றார் குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாத்.
   நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை  சார்பில்  சாலைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை  பயன்படுத்துவதன் அவசியம் குறித்து காவலர்களுக்கான 2 நாள் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.  நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய இம்முகாமினை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாத் தொடங்கி வைத்து பேசியது; சாலை விபத்துகள் 3 காரணங்களால் நேரிடுகிறது. சாலைகளின் மோசமான நிலை, ஓட்டுநர்கள் மது போதை மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, கவனக்குறைவாக செயல்படுவது, மேலும் வாகனங்களை சரியாக பராமரிக்காதது 
  ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகிறது.  வாகன ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் பெரும்பாலான விபத்துகளை தவிர்க்கலாம். 
  நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அதிக விபத்துகள் நேரிடுகிறது.  ஒரு சில வாகனங்களால்தான் விபத்து ஏற்படுகிறது. சாலை அனைவருக்கும் பொதுவானது. ஓட்டுநர்களின் கவனக்குறைவே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே ஓட்டுநர்கள் கவனமுடன், விழிப்புணர்வுடன் செயல்பட்டாலே பெரும்பாலான விபத்துகளை தவிர்க்க முடியும். சாலை ஓரங்களில் உள்ள சுவர், மின்கம்பங்களில் மோதுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில்செல்பவர்கள் 40 கி.மீ. வேகத்துக்கு குறைவாக சென்றால் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.  இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். அதே போல் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்   என்றார் அவர்.
  நிகழ்ச்சியில் உதவிக் காவல் கண்காணிப்பாளர்கள்  ஜவஹர்,   கார்த்திகேயன்(பயிற்சி), வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஸ், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் அருள் ஜான் ஒய்ஸ்லின்ராஜ், உதவி ஆய்வாளர் செந்தில்வேல், டாக்டர் மரியசுபின், பேராசிரியர் வேணுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai