சுடச்சுட

  

  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தாமதம்: ஊழியரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 12th January 2019 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மார்த்தாண்டம் அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தாமதம் ஏற்பட்டதையடுத்து, நியாயவிலைக் கடை ஊழியரை தாக்கியதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
  மார்த்தாண்டம் அருகே மேல்புறத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் வெள்ளிக்கிழமை பொங்கல் பரிசுப் பொருள்கள் வாங்க மக்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு கடை ஊழியர் செல்வன் டோக்கன் வழங்கியுள்ளார். அப்போது, அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனராம். இதனால், அவர் கடையைப் பூட்டிவிட்டு வெளியே சென்றாராம்.
  சிறிது நேரத்துக்குப் பிறகு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்க அவர் கடையை திறக்க வந்தபோது கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், சந்திரன், பைஜு (40) ஆகியோர் கடை ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினராம். இதையடுத்து, அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
  இந்த நிலையில், நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி, பாகோடு கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருதங்கோடு நியாயவிலைக் கடை உள்ளிட்ட 7 நியாயவிலைக் கடைகளையும் அதன் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர்.
  மற்றொரு ஊழியருக்கு மிரட்டல்: கொல்லங்கோடு காவல் சரகம், மேக்காடு பகுதியில் மெதுகும்மல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் உள்ளது. இதன் அருகே நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை காலை கடை ஊழியர் ரெஜிலா (29) பொங்கல் பரிசுப் பொருள்கள்  வழங்கிக் கொண்டிருந்தார். 
  அப்போது, அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த ரவி, பாபு, சுதாகரன் மற்றும் 3 பேர் சேர்ந்து, பொங்கல் பரிசுப் பொருள்கள் தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறி, கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டனராம். மேலும், அலுவலக மேஜையை சேதப்படுத்தி, ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
  இதுகுறித்து நியாயவிலைக் கடை ஊழியர் ரெஜிலா அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai