குமரியில் பலாக் காய்களுக்கு கடும் கிராக்கி: வீடு வீடாக சென்று கொள்முதல் செய்யும் வணிகர்கள்

குமரி மாவட்ட பலாக் காய்களுக்கு கேரளத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், வணிகர்கள் வீடு வீடாகச் சென்று கொள்முதல் செய்து வருகின்றனர்.

குமரி மாவட்ட பலாக் காய்களுக்கு கேரளத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், வணிகர்கள் வீடு வீடாகச் சென்று கொள்முதல் செய்து வருகின்றனர்.
முக்கனிகளில் ஒன்றான பலாப் பழத்தை தரும் பலா மரங்கள், குமரி மாவட்டத்தில் பரவலாக காணப்படுகின்றன. பலாவில் கூழைப் பலா, வருக்கைப் பலா, அயனிப் பலா ஆகியவை பிரதான வகைகளாகும். கன்னியாகுமரி மேற்கு மாவட்டப் பகுதிகளில் பெரும்பாலானவர்களின் வீட்டுத் தோட்டங்களில் பலா மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில் கூழைப் பலாவை விட சுவை மிகுந்த வருக்கைப் பலா மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. வருக்கைப் பலாவிலும் தேன் வருக்கை, நெட்டடி வருக்கை என பல  உள்இனங்கள் உள்ளன.
பலா  மரத்தின் பழங்கள் மட்டுமின்றி அவற்றின் இலை, பால், வேர், கொட்டை உள்ளிட்டவை மருத்துவக் குணங்கள் கொண்டவையாகும். மஞ்சள் நிறத்துடன் காணப்படும் பலா மரத் தடிகள் வீடுகளின் நிலைகள், ஜன்னல்கள் மற்றும் அறைக் கலன்கள் செய்வற்கு முக்கியத் தேர்வாக உள்ளது.
அதிக கிராக்கி: இனிப்பு சுவை மிகுந்த பலாப் பழத்தை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்ற போதும், முற்றிய மற்றும் முற்றாத பலாக் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் துவரன், வத்தல் உள்ளிட்டவையும் மக்கள் மத்தியில் பிரபலமான உணவுக் கூட்டு மற்றும் நொறுக்குத் தீனிகளாகும். தீயில் சுட்டும், வேக வைத்தும் உண்ணப்படும் பலாப்பழக் கொட்டைகளில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் புரோட்டீன்கள் உள்ளதாக மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் பலாக் காய்கள் மற்றும் பழங்களின் சீசன் காலங்களாகும். இந்நிலையில் தற்போது உற்பத்தி குறைவு காரணமாக பலாக் காய்கள் மற்றும் பழங்களின்  வரத்து குறைவாக உள்ளது. தற்போது கேரளத்திலிருந்து அதிக அளவில் பலாக் காய்கள் தில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள ஹோட்டல்களுக்குச் செல்லும் நிலையில், குமரி மாவட்டத்திலிருந்து பலாக் காய்கள் அதிக அளவில் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக வணிகர்கள் வீடு வீடாகச் சென்று பலாக் காய்களுக்கு விலை பேசி அவர்களே பறித்துக் கொள்கின்றனர். இதில் முற்றாத காய்களுக்கு ரூ. 10 முதல் ரூ.20 வரை விலையாக வணிகர்கள் கொடுக்கின்றனர்.
இது குறித்து குலசேகரம் பகுதியைச் சேர்ந்த பலாக் காய் வணிகர் ஒருவர் கூறியது: தற்போது பலாக் காய்களின் வரத்து குறைவாக உள்ளது. இந்நிலையில் கேரளத்தில் கடும் கிராக்கி உள்ளது. இதனால் பலா மரங்கள் உள்ள வீடுகளைக் கண்டுபிடித்து காய்களை கொள்முதல் செய்கிறோம். பெரும்பாலும் முற்றாத காய்களையே வாங்குகிறோம். இதில் வருக்கை பலாக் காய்களை மக்கள் அதிகமாக விற்பதில்லை. பெரும்பாலும் கூழன் பலாக் காய்கள்தான் கிடைக்கின்றன. இங்கிருந்து கேரளத்துக்கு செல்லும் பலாக் காய்கள்,  கேரள மாநில பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட அளவில் எடுக்கப்படுகிறது. மேலும் தில்லி உள்பட வட இந்திய மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது என்றார்.
இது குறித்து முன்னோடி விவசாயி பி. ஹென்றி கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தற்போது வீடு வீடாக வந்து பலாக் காய்களை வணிகர்கள் விலை பேசி பறித்துச் செல்கின்றனர். தற்போது இடைப்பருவ சீசன் காலமாகும். குமரியிலிருந்து கேரளம் செல்லும் பலாக் காய்கள், குளிர்பதன வசதி செய்யப்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு தில்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் காய்களை உரித்தும், உரிக்காமலும் தேவைக்கேற்ப கொண்டு செல்லப்படுகிறது.
அண்மையில் ஒரு விவசாயக் கண்காட்சி நிகழ்சிக்காக வேளாண்மைத் துறை சார்பில் தில்லி சென்றிருந்த போது அங்குள்ள உயர்தர ஹோட்டலில் பலாக் காய்  துவரன் பரிமாறப்பட்டதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம். பலாக் கொட்டைகளை மாவாகப் பொடித்து பல்வேறு உணவுப் பொருள்களில் சேர்க்கின்றனர். மேலும் மருந்து தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com