குமரி மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, அதன் செயலர் எஸ்.ஏ.அசோகன் தலைமை வகித்தார். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் பொங்கல் பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக, கட்சியின் கிழக்கு மாவட்ட  அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில், பள்ளிவிளை ரயில்வே நகர் மகளிர் மட்டும் அமைப்பினரோடு இணைந்து,  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதிலும் தில்லி சிறப்புப் பிரதிநிதி பங்கேற்று பெண்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
 தொடர்ந்து, அழகப்பப்புரம், பொட்டல்குளத்தில் ஐயன்மலை குபேர ஐயப்பசாமி திருக்கோயிலில் ரூ. 7 லட்சம்  மதிப்பில் தோரண நுழைவுவாயில்  அமைப்பதற்கு,  அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன்,  நகரச் செயலர் ஜெயச்சந்திரன் (எ) சந்துரு, தோவாளை ஒன்றியச் செயலர் எஸ்.கிருஷ்ணகுமார்,   மாவட்ட மருத்துவர் அணி செயலர் சி.என்.ராஜதுரை,  புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சாம்ராஜ், அமைப்புசாரா ஓட்டுநர்அணி மாவட்டத் தலைவர் பி.சாம்ராஜ், வைகுண்டமணி, மகளிர் மட்டும் அமைப்பின் நிர்வாகி விஜிலா, மாவட்ட இணைச்செயலர் லதா ராமச்சந்திரன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை கிழக்கு மாவட்டச் செயலர் த.நவாஸ், சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலர் ஞாலம் ஜெகதீஸ், சாந்தி, மாவட்டப் பிரதிநிதி ரபீக், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலர் ஜெயசீலன், விக்ரமன், மாவட்ட மகளிர் அணிச் செயலர் ஹெப்சிபா உள்பட பலர் பங்கேற்றனர். 
கன்னியாகுமரி: சாமிதோப்பு அன்புவனத்தில் திருவருட்பேரவை சார்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். இதில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், குமரி மாவட்ட திருவருட் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருள்பணி. மரிய வின்சென்ட், பொருளாளர் சாகுல் அமீது, செய்தி தொடர்பாளர் முகமது அன்சாரி, நாகர்கோவில் நகரத் தலைவர் சாகுல் அமீது, பெட் பொறியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் முகமது ஜகபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொங்கல் விழாவைத் தொடர்ந்து பல்சமய உரையாடல் நடைபெற்றது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல வளாகத்தில் பங்குத்தந்தை  ஜோசப் ரொமால்டு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கு மக்கள், பங்குப்பேரவையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செங்கல் சிவபார்வதி அம்மன் கோயிலில்...
செங்கல் சிவ பார்வதி அம்மன் கோயிலில் மகர பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்டம் - கேரள மாநில எல்லைப் பகுதியான உதியன்குளங்கரை அருகே அமைந்துள்ளது பிரசித்திபெற்ற செங்கல் மகேஸ்வரம் சிவ பார்வதி அம்மன் கோயில். இக்கோயிலில் தை முதல் தேதியையொட்டி  மகர பொங்கல் விழா நடைபெற்றது.  காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் தீ மூட்டி, விழாவை தொடங்கிவைத்தார். தொடர்ந்து கோயில் சுற்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இந் நிகழ்ச்சியில் கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை தொகுதி எம்.எல்.ஏ. ஆன்சலம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகுமார் மற்றும் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இக் கோயிலில் உலக அளவில் அதிக உயரம் கொண்ட 11 அடி உயரமுள்ள சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  இந்த சிவலிங்கம் வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி சிவராத்திரி நாளில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி சார்பில்...
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு,  மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  பிரின்ஸ் எம்எல்ஏ,  நகரத் தலைவர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், மாவட்ட துணைத் தலைவர் மகேஷ் லாசர்,  வட்டாரத் தலைவர்கள் ஜெரால்டுகென்னடி,  வைகுண்டதாஸ்,  சிவகுமார்,  ராஜதுரை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சாந்திரோஸ்லின்,  ஜோசப்மணி,  மருத்துவ அணித் தலைவர் ஜெகன்ஸ்காட், மகளிர் அணித் தலைவி சபீதா, ஜெயசிங், சகானா, கலைப்பிரிவு ராம்குமார், அந்தோணிமுத்து, தவசிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com