சாமிதோப்பு தலைமைப் பதியில் நாளை தைத் திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன. 18) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன. 18) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
 சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் பதினொரு நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தைத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தலைமைப் பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து கொடியேற்றுகிறார். தொடர்ந்து, முற்பகல் 11 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாள் அன்ன வாகனத்திலும், நான்காம் நாள் இரவு பூஞ்சப்பர வாகனத்திலும், ஐந்தாம் நாள் பச்சைசாற்றி மயில் வாகனத்திலும், ஆறாம் நாள் சர்ப்ப வாகனத்திலும், ஏழாம் நாள் சிவப்புசாற்றி கருட வாகனத்திலும் அய்யா வீதியுலா வருதல் நடைபெறும்.
 கலி வேட்டை: 8ஆம் நாளான ஜன. 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டர் வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணறு அருகே கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அய்யா அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறும். ஒன்பதாம் நாளன்று அய்யா அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாளன்று இந்திர வாகனத்திலும்  பவனி வருதல் நடைபெறும்.
11 ஆம் திருவிழாவான ஜன. 28இல் பிற்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, வாகன பவனி, அன்னதர்மம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com