நாகர்கோவிலில் தொழிலாளி கொலை: மகன் கைது
By DIN | Published On : 24th January 2019 01:14 AM | Last Updated : 24th January 2019 01:14 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கூலித் தொழிலாளியை அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.
பூதப்பாண்டி அருகேயுள்ள காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (58), கூலித் தொழிலாளி. இவரது மகன் தனுஷ் (23). சில நாள்களுக்கு முன்பு, மதுபோதையிலிருந்த தனுஷுக்கும், நடராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது நடராஜனை தனுஷ் சரமாரியாகத் தாக்கினாராம். பலத்த காயமடைந்த நடராஜன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதையடுத்து, காவல் துறையினருக்குத் தெரிவிக்காமல், நடராஜனின் சடலத்தை அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை புதைக்க முயன்றனர்.
தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனையில், தாக்கப்பட்டதால்தான் நடராஜன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அழகியபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஹரி நயினார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, தனுஷை கைது செய்தனர்.