அழகப்பபுரத்தில் இந்தியன் வங்கி கிளை புதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 29th January 2019 01:38 AM | Last Updated : 29th January 2019 01:38 AM | அ+அ அ- |

குமரி மாவட்டம், அழகப்பபுரத்தில் இந்தியன் வங்கி கிளையின் புதிய கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் கோபிகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், அதிக லாபம் ஈட்டுவதில் இந்திய அளவில் இந்தியன் வங்கி முதலிடம் வகிக்கிறது. சுய உதவிக்குழு கடன் வழங்குவதில் தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் நிதிசார் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னணி வங்கியாக செயல்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூடுதல் ஆட்சியர் ராகுல்நாத் கலந்து கொண்டு, வங்கியின் புதிய கட்டடத்தையும், ஏ.டி.எம். மையத்தையும் திறந்து வைத்தார். பங்குத் தந்தை நெல்சன் பால்ராஜ் வாழ்த்திப் பேசினார்.
விழாவில் மலர் தொண்டு நிறுவனத்தின் 8 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மாவட்ட முன்னாள் நீதிபதி டி.சேவியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், நாகர்கோவில் கிளை முதன்மை மேலாளருமான நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் ஜெனிபர் வரவேற்றார். காசாளர் கீதா நன்றி கூறினார்.