சொத்தவிளை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அரிய வகை ஆமை
By DIN | Published On : 29th January 2019 01:39 AM | Last Updated : 29th January 2019 01:39 AM | அ+அ அ- |

நாகர்கோவில் சொத்தவிளை கடற்கரையில் அரிய வகையைச் சேர்ந்த பெண் ஆமை ஒன்று இறந்து கரை ஒதுங்கியது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரைஆலிவ் ரிட்லி எனப்படும் சிற்றாமைகள் கடற்கரை கிராமங்களில் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இந்நிலையில், நாகர்கோவிலை அடுத்த சொத்தவிளைகடற்கரையில் முதிர்ந்த அரிய வகை பெண் ஆமை இறந்து 2 நாள்களான நிலையில் கிடந்தது.
இதுகுறித்து சூழல் ஆர்வலர் எஸ்.எஸ். டேவிட்சன் கூறியது: இந்த ஆமையானது பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் முதல் பிரிவில் உள்ளது. யானை, சிங்கம், புலி, சிறுத்தை, ராஜநாகம் உள்ளிட்டவை இப்பட்டியலில் அடங்கும். இறந்த ஆமை முறைப்படி பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஆமைகள் பாதுகாப்புத் திட்டத்தை வலுவூட்டும் வகையில், அதன் மீதான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். ஆமைகள் பற்றிய போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவற்றை பாதுகாத்து, கடல் சூழலைப் பேணவேண்டும். ஆமைகள் கடல் சூழலியலில் இன்றியமையாத, தவிர்க்க முடியாத பங்குவகிக்கின்றது. கடலை துப்புரவு செய்யும் இந்த விலங்கை அழியாமல் பாதுகாப்பது நமது கடமை என்றார் அவர்.