பொன்மனை தொடக்கப் பள்ளியில் பாடம் நடத்திய பட்டதாரிகள்: பெற்றோர் ஏற்பாடு
By DIN | Published On : 29th January 2019 01:39 AM | Last Updated : 29th January 2019 01:39 AM | அ+அ அ- |

குலசேகரம் அருகே பொன்மனை அரசுத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பெற்றோர்கள் மாற்று ஆசிரியர்களை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர்.
பொன்மனை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொடக்கப் பள்ளிக்கு திங்கள்கிழமை மாணவர்கள் வழக்கம்போல வந்திருந்தனர். ஆனால், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மேலும், வகுப்பறைகளும் திறக்கப்படவில்லை.
இதையடுத்து, மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர் சுமார் 25 பேர் பள்ளியின் முன் திரண்டனர். பெற்றோர் சார்பில் ராஜகுமார் மற்றும் கிராம கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகி பிரதீஸ் உள்ளிட்டோர், அப்பகுதியைச் சேர்ந்த 4 பட்டதாரி பெண்களை வரவழைத்து பள்ளி முற்றத்தில் மாணவர்களை அமரவைத்து பாடங்களை நடத்த ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, பிற்பகல் 3 மணி வரை மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இதனிடையே, மதியம் மாணவர்களுக்கு சத்துணவும் வழங்கப்பட்டது.