கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி இயக்க கோரிக்கை
By DIN | Published On : 01st July 2019 07:34 AM | Last Updated : 01st July 2019 07:34 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வாராந்திர ரயிலை, தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து புதுச்சேரிக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி வந்துவிட்டு, மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை புதுச்சேரி செல்லும் வகையில் இயங்கி வருகிறது. இனி இந்த ரயில் சேவை மாற்றப்படுகிறது.
அதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை கன்னியாகுமரி வந்துவிட்டு, மறுமார்க்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 8) கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை புதுச்சேரி செல்ல இருக்கிறது. இந்த ரயிலின் காலஅட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியது: இந்த ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்கு மறுநாள் காலை 9 மணிக்கு போய் சேருமாறும், மறுமார்க்கத்தில் புதுச்சேரியிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரிக்கு காலை 5.30 மணிக்கு வந்து சேருமாறும் ரயில் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும் இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்குவதோடு, கேரள மாநிலம் கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.