குமரியில் ரூ.9660 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு
By DIN | Published On : 03rd July 2019 02:59 AM | Last Updated : 03rd July 2019 02:59 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019 - 20ஆம் நிதியாண்டில், வங்கிகள் மூலம் ரூ.9660.67 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2019 - 20 ஆம் நிதியாண்டில் வங்கி கடன் வழங்கும் திட்ட அறிவிக்கை வெளியீடு, நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அறிக்கையை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் கலைச்செல்வன் பெற்றுக்கொண்டார்.
கடன் திட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில், வங்கி கடன் வழங்கும் அளவாக ரூ.9660.67 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயத்துக்கு ரூ.5,305 கோடி, சிறு- குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.790 கோடி, கல்வி, வீடுகட்டுதல், ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.890.85 கோடியும், முன்னுரிமை அல்லாத கடன்களுக்கு ரூ.2674.26 கோடியும் வழங்கப்படும்.
முந்தைய நிதியாண்டில் குமரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள்
ரூ. 6716.17 கோடி கடனாக வழங்கியுள்ளன. இது நிர்ணயிக்கப்பட்ட அளவான ரூ.6610 கோடியை விட 10 சதவீதம் கூடுதலாகும். வங்கிகளின் இந்தச் சேவையை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். மேலும், விவசாயத்துக்கு அதிக அளவு கடன்கள் வழங்குமாறு வங்கி அலுவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர் முத்துச்செல்வன், நபார்டு வங்கி சைலேஷ் மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பி.ராம்குமார் நன்றி கூறினார்.