கோதையாறு விளைநிலப் பகுதிகளில் யானைகள் கூட்டத்தால் பயிர்கள் சேதம்: மக்கள் அச்சம்
By DIN | Published On : 03rd July 2019 07:03 AM | Last Updated : 03rd July 2019 07:03 AM | அ+அ அ- |

குமரி மாவட்டம் கீழ் கோதையாறையொட்டிய ரப்பர் கழகப் பகுதிகளில் யானைகள் கூட்டமாக வந்து பயிர்களைச் சேதப்படுத்துகின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளையொட்டிய பகுதிகளில் அரசு ரப்பர் கழகம் உள்ளது. மாவட்டத்தில் கடந்த மாதம் காடுகளில் கடும் வறட்சி நிலவிய நிலையில் யானைக் கூட்டங்கள் ரப்பர் கழக பகுதிகளில் புகுந்துள்ளன.
இதில், யானைகள் 3 குழுக்களாக குட்டிகளுடன் அலைகின்றன. ரப்பர் கழகப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள ரப்பர் செடிகளையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், பேச்சிப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் யானைகள் வந்து நீர் அருந்துவதும், தண்ணீரில் விளையாடுவதுமாக உள்ளன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை யானைகள் கூட்டமாக வந்து விளாமலை பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் புகுந்து ரப்பர் மரங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த கொட்டகைகளையும் இழுத்து தள்ளின. இதேபோல், மைலாறு நூலிப்பொற்றை, மோதிரமலை அருகே ரப்பர் கழக சரகம் 5 பகுதியில் புகுந்து அங்கு நடப்பட்டிருந்த வாழை, அன்னாசி உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளன.
மேலும், விளாமலை பகுதியில் யானைக் கூட்டத்தை புகைப்படம் எடுக்கச் சென்ற ஊடகத்துறையினரை, 5 யானைகள் துரத்திச் சென்றன. அப்போது, அப்பகுதியிலுள்ளவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை வேறு பகுதிக்கு திருப்பினர்.
இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க செயலர் ரெகுகாணி கூறியதாவது: குமரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த மாதம் நிலவிய வறட்சி காரணமாக உள்காடுகளில் இருந்து யானைகள் பேச்சிப்பாறை அணையையொட்டி ஆற்றுப்பகுதிகளிலும், ரப்பர் கழக பகுதிகளிலும் வந்து பயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் காணி மக்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். ரப்பர் கழக பகுதிகளில் புதர்களும், களைகளும் வளர்ந்து கிடப்பதால் யானைகள் நடமாடுவதை மக்கள் எளிதில் கண்டு பிடிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, ரப்பர் கழக நிர்வாகிகள் ரப்பர் பால்வடிக்கப்படும் காடுகளில் உள்ள புதர்களை உடனே அகற்ற வேண்டும். யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து உடனுக்குடன் மக்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்றார்.