தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை

வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் தலைமை வகித்தார்.  சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட காலனி வீடுகள் காலாவதியாகி பாழடைந்து,  இடிந்து விழும் நிலையில் உள்ளன. தமிழக அரசு இந்த வீடுகளை அகற்றி புதிய வீடுகளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கட்டித்தரவேண்டும், இலவச குடிமனைப்பட்டா வழங்கியவர்களுக்கு அந்த இடங்களில் வீடு கட்டி தரவேண்டும், அருந்ததியர், காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு இலவச குடிமனைப்பட்டா வழங்குவதுடன், அவர்கள் வசிக்கும் இடங்களில் தமிழக அரசு வீடு கட்டி தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
இதில்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜயமோகனன்,  க.கணேசன், திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலர் நெல்லை கதிரவன், அன்பழகன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி ஆகியோர் பேசினர்.
 இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள்,  பல்வேறு அமைப்பினர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com