குலசேகரத்தில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் 9 இடங்களில் 28 கேமராக்கள் பொருத்துவதென காவல்துறையினர், வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் 9 இடங்களில் 28 கேமராக்கள் பொருத்துவதென காவல்துறையினர், வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றான குலசேகரத்தில் வணிகர் சங்கத்தின் முயற்சியில் 2016 இல் முக்கிய 5 சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான கட்டுப்பாட்டு அறையை காவல் நிலையத்தில் வைக்க மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்காததால் கேமராக்கள் செயல்படாமல் பழுதாகின.
இதுதொடர்பான புகார் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதைத்தொடர்ந்து எஸ்.பி., தக்கலை டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவின்பேரில் குலசேகரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து, குலசேகரம் வணிகர் சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் துணைத் தலைவர் முருகபிரசாத் தலைமை வகித்தார். செயலர் எம்.விஜயன், துணைச்செயலர் செறாபின் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில், திருவட்டாறு வட்டார காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் காஸ்டன் கிளிட்டஸ், வணிகர்கள், பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். குலசேகரம் பேருந்து நிலையம், கான்வென்ட் சந்திப்பு, அரசமூடு சந்திப்பு, காவல்ஸ்தலம் சந்திப்பு, மாமூடு சந்திப்பு, நாகக்கோடு சந்திப்பு, சந்தை சந்திப்பு, செருப்பாலூர் சந்திப்பு, கல்லடிமாமூடு சந்திப்பு ஆகிய  9 இடங்களில் வணிகர்கள் மற்றும் நிறுவனங்களின் சார்பில் 28 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, இதன் கட்டுப்பாடு அறையை குலசேகரம் காவல் நிலையத்தில் அமைப்பது, வரும் 17 ஆம் தேதி மாவட்ட  காவல் கண்காணிப்பாளரை அழைத்து கண்காணிப்புக் கேமராக்களை இயக்கி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 
சங்கப் பொருளாளர் ரவி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com