கருங்கல் பகுதியில் மழைநீர் ஓடையை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 24th July 2019 07:22 AM | Last Updated : 24th July 2019 07:22 AM | அ+அ அ- |

கருங்கல் சந்திப்பு பகுதிகளில் உள்ள மழைநீர் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கருங்கல் பேரூராட்சியில், கருங்கல் பேருந்து நிலையம்- கூனாலுமூடு சாஸ்தா சாலை, காமராஜர் சந்திப்பு- தக்கலை சாலை, ஆட்டோ நிலையம்- மார்த்தாண்டம் சாலை, வேன்நிலையம் ஆகியவற்றின் ஓரத்தில் உள்ள மழைநீர் ஓடை ஆங்காங்கே அடைபட்டு காணப்படுகிறது.
இதன் காரணமாக, மழைக்காலங்களில் தண்ணீர் சாலை வழியாக பெருக்கெடுத்து ஓடுவதால், அவை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்படுகின்றன. இச்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நடைபயணிகள் அவதியுற்று வருகின்றனர். மேலும், கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து வெளிப்புற வாயில், காய்கனி சந்தை, மீன்சந்தை, வேன் நிலையம், ஆட்டோ நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.
இப்பகுதியில் மழைநீரோடு கழிவுநீரும் கலப்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் கருங்கல் சந்திப்பு பகுதிகளில் உள்ள மழைநீர் ஓடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.