Enable Javscript for better performance
தாழ்வான நீர்மட்டம்: பேச்சிப்பாறை அணையில் படகுகளை இயக்குவதில் சிக்கல்: பழங்குடி மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    தாழ்வான நீர்மட்டம்: பேச்சிப்பாறை அணையில் படகுகளை இயக்குவதில் சிக்கல்: பழங்குடி மக்கள் அவதி

    By DIN  |   Published on : 25th July 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மலைக் கிராமங்களுக்கு படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காணியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பேச்சிப்பாறை அணை உள்ளது. இந்த அணையையொட்டி உள்ள மலைக் காடுகளில் காணியின பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  
    மாவட்டத்தில் 48 மலைக் குடியிருப்புகளில் காணி மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இதில் பெரும்பாலான காணிக் குடியிருப்புகள் பேச்சிப்பாறை அணையையொட்டிய மலைகளிலேயே அமைந்துள்ளது.
     இந்த மலைகளில் வாழும் மக்கள் நகரப்பகுதிகளுக்கு வர தற்போது பேச்சிப்பாறை அணையில் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் படகுகள்  உள்ளன.  உள்ளாட்சி அமைப்புகள் வலுப்பெற்றதைத் தொடர்ந்தும்,  மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாகவும்  பல பழங்குடி குடியிருப்புகளுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  எனினும் இந்தச் சாலை வசதிகள் முழுமையடையாததால் மக்கள்  தங்களின் போக்குவரத்துக்கு  படகுகளையே நம்பிய நிலையில் உள்ளனர்.
    இந்தப் படகுகளில்  பேச்சிப்பாறை அரசு உண்டுறை மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பேச்சிப்பாறை, குலசேகரம் உள்ளிட்ட நகர்ப்புற  பகுதிகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும் பழங்குடி மக்கள்  நகர்புற பகுதிகளிலிருந்து, தச்சமலை, தோட்டமலை அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர்  பயணிக்கின்றனர்.  தச்சமலை, கிளவியாறு, தோட்டமலை ஆகிய இடங்களில் பொதுவாக படகுகள் நிற்கின்றன.  இந்தப் படகுகள் பெரும்பாலும் பேச்சிப்பாறை அணை அருகில் மான்பூங்கா அல்லது தேக்குக்காடு பகுதியில் வந்து சேருகின்றன. 
    தண்ணீர் குறைந்ததால் சிக்கல்: பொதுவாக பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் நிரம்பி இருந்தால் மட்டுமே மக்களுக்கு படகுப் பயணம் எளிதாக இருக்கும். இல்லையெனில் நீண்ட தொலைவு அணைக்குள் நடந்த பின்னரே படகில் ஏறமுடியும். இந்நிலையில் தற்போது பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் மட்டம் மிகக்குறைந்த அளவான 5 அடியை எட்டியுள்ளதால், தொலைதூர பகுதிகளான தோட்டமலை, கிளவியாறு உள்ளிட்ட இடங்களிருந்து படகுகள் இயக்கப்படவில்லை. 
    மேலும் தச்சமலை தொடக்கப்பள்ளி அருகிலிருந்து இயக்கப்பட வேண்டிய படகு ஆழத்துகுன்று என்ற இடத்திலிருந்து இயக்கப்படுகிறது.  இதனால் தோட்டமலை, கிளவியாறு பகுதி மக்கள் நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. 
    மர மூடுகளால் பாதிப்பு: தற்போது அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் அணையின் நீர்ப்பரப்பில் ஏராளமான மரமூடுகள் தென்படுகின்றன. இந்த மரமூடுகளில் படகுகள் அவ்வப்போது மோதி விடுகின்றன. இதனால் படகுகளில்  உடைப்பு  ஏற்பட்டு அவற்றில்  தண்ணீர் உள்புகும் நிலையும் ஏற்படுகிறது. இதனால்  பயணிகள் அச்சப்படும் நிலையும் காணப்படுகிறது.
    இதுகுறித்து பேச்சிப்பாறை அணையில் படகு இயக்கும் கிருஷ்ணன் குட்டி காணி கூறியதாவது: 
    தற்போது அணையில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளதால் தோட்டமலை, கிளவியாறு உள்ளிட்ட பகுதிகளிருந்து படகுகளை இயக்கமுடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் நெடுந்தொலைவு காட்டுப்பாதை வழியாக நடந்து நகர்ப்புற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. 
    மேலும் அணையில் நீர்மட்டம் குறைந்ததால், அணையில் ஏராளமான  உலர்ந்த குற்றி மூடுகள் (மரமூடுகள்) வெளியே தெரிந்தும், தெரியாமலும் நிற்கின்றன. இவை படகுகளில் உரசுவதால் படகுகள் சேதமடைகின்றன. எனவே, இந்த மர மூடுகளை அகற்றித் தருவதற்கு பொதுப்பணித்துறையும், வனத்துறையும், மீன் வளத்துறையும் முன் வர வேண்டும்  என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai