Enable Javscript for better performance
நகர குடிநீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    நகர குடிநீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆட்சியர் உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டார்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் கூறியது:
    நாகர்கோவில் நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை தீர்க்க மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    நகரில் சாலைப் பணிகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்படும் பள்ளங்களை உடனே மூடவும், சாலை பணியின் போது ஏற்படும் பள்ளங்களை சீரமைக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
    திருவனந்தபுரம் - நாகர்கோவில் இரட்டை ரயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் தாமதமின்றி முடிக்க வேண்டும். பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரேவதி, சார் ஆட்சியர்கள் விஷ்ணுசந்திரன் (நாகர்கோவில்), சரண்யாஅரி (பத்மநாபபுரம்), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத்,  காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஜவகர், ரயில்வே துறை செயற்பொறியாளர் எழில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா. சுகன்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai