முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
இரணியல் அருகே மாணவிகளை கேலி செய்தவர்களுக்கு நூதன தண்டனை
By DIN | Published On : 30th July 2019 07:11 AM | Last Updated : 30th July 2019 07:11 AM | அ+அ அ- |

இரணியலில் பள்ளி மாணவிகளை கேலி செய்த மாணவர்களுக்கு போலீஸார் நூதன தண்டனை அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் முன்பு இளைஞர்கள் மாணவிகளை கேலி செய்வது, மோட்டார் சைக்கிளில் சாகச செயல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளன. இச்செயலில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இரணியல் காவல் நிலையப் பகுதிகளில் மாணவர்கள் மாணவிகளை கேலி செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் ராபின்ஜெயன், போலீஸார் மாடத்தட்டு அருகே பள்ளி முன்பு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு மாணவர்கள் சிலர் மாணவிகளை கேலி செய்தனர். போலீஸார் அம்மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட 5 மாணவர்களின் பெற்றோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
காவல் நிலையம் வந்த பெற்றோர் முன்னிலையில் அந்த மாணவர்கள் தங்கள் தவறை உணரும் வகையில், மாணவிகளை கேலி செய்தது தவறு இனி அந்த தவறை செய்யமாட்டோம் என 501 முறை எழுதுமாறு பணித்தனர். மாணவர்கள் எழுதி முடித்ததும் அறிவுரை கூறி அனுப்பினர்.