முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரி அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகளுக்கு கருவிகள் அளிப்பு
By DIN | Published On : 30th July 2019 07:10 AM | Last Updated : 30th July 2019 07:10 AM | அ+அ அ- |

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் இலவச காதுகேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என மருத்துவக் கல்லூரியின் டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தினம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொண்டாடப்படும். இதையொட்டி காலை 10.30 மணிக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது, தமிழக அரசின் நவீனமயமாக்கப்பட்ட விபத்து அறுவை சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சைக்கான கேத்லாப் பிரிவு ஆகியன தொடங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் கொப்புளங்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு சிகிச்சையின் மூலம் அக்குழந்தை பூரண குணமடைந்துள்ளது.
நாணயம், கொண்டை ஊசி போன்ற பொருள்களை விழுங்கிய 2 குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவர்கள் குணமடைந்துள்ளனர். தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 60 குழந்தைகளுக்கு, ரூ.10 லட்சம் மதிப்பில் இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
அப்போது, உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், கண்காணிப்பாளர் பிரின்ஸ்பயாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.