முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குளச்சல் பகுதியில் சட்ட விரோதமாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்: ஆட்சியரிடம் புகார்
By DIN | Published On : 30th July 2019 07:12 AM | Last Updated : 30th July 2019 07:12 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மிசா சோமன் தலைமையில் பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் அளித்த மனு: கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரம் பிள்ளையார்குளத்தில் மீன்பிடிக்கும் வலையில் இரண்டரை அடி உயரமுள்ள சிங்கத்தின் மீது அமர்ந்த ஐம்பொன் அம்மன் சிலை சிக்கியது.
இச்சிலை தசரா ஆன்மிகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். தகவலறிந்து காவல்துறை அதிகாரிகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஐம்பொன் அம்மன் சிலை திடீரென மாயமானது. இச்சிலையை கண்டுபிடிப்பதில் காவல்துறை அலட்சியமாக உள்ளது. எனவே, ஐம்பொன் அம்மன் சிலை மாயமானது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு பிரிவினர் விசாரிக்க வேண்டும்.
குருந்தன்கோட்டை அருகே ராமநாதபுரம் ஊர் தலைவர் மணிகண்டன் தலைமையில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அளித்த மனு: வெள்ளிச்சந்தை ஊராட்சியில் ராமநாதபுரத்தில் வேங்கைத்தாவு குளத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊராட்சி குடிநீர் கிணறு, நீரேற்றும் அறை, மின் இணைப்பு, தெரு விளக்குகள் உள்ளன. அங்கிருந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இக்குளத்திற்கு ராஜாக்கமங்கலம், ஊச்சிக்கால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. இந்த குளத்திற்கு செல்லும் வழிப்பாதையில் காணப்படும் அடைப்பால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். பச்சைத் தமிழகம் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் அளித்த மனு: குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக மாத்தூர் தொட்டிப்பாலம் திகழ்கிறது.
இப்பாலம் தேமடைந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கட்டணங்கள் மட்டும் தவறாமல் வசூலிக்கப் படுகிறது. இப்பாலத்தின் சிறப்பை அறியும் வகையில் அங்கு தகவல் பலகை, கல்வெட்டு அமைக்கவேண்டும். பராமரிப்பு பணி மேற்கொண்டு தொட்டி பாலத்தின் நுழைவு வாயிலில் காமராஜர் சிலையை அமைத்து பொன்விழா கொண்டாட வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் மார்த்தூர் ஜெயன் தலைமையில் அளித்த மனு: இம்மாவட்டத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வறுமைக்கோடு பட்டியல் கணக்கெடுக்கப்பட்டது. இது வெளிப்படையாக இல்லாததால் ஏழை குடும்பங்கள் விடுபட்டுள்ளனர். அரசின் உதவிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களை முறையாக கண்டறிந்து, அம்மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அந்தோணிமுத்து அளித்த மனு: குளச்சல், அம்மாண்டிவிளை, மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.