முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாளை ஆடி அமாவாசை பலி தர்ப்பணம்: குழித்துறையில் சிறப்பு ஏற்பாடுகள்
By DIN | Published On : 30th July 2019 07:07 AM | Last Updated : 30th July 2019 07:07 AM | அ+அ அ- |

ஆடி அமாவாசையையொட்டி புதன்கிழமை (ஜூலை 31) பலி தர்ப்பணம் செய்வதற்காக குழித்துறை மகாதேவர் கோயில் அருகில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குழித்துறையில் ஆடி மாத அமாவாசையையொட்டி ஆண்டுதோறும் வாவு பலி பொருள்காட்சி நடத்தப்படுகிறது. 94 ஆவது வாவு பலி பொருள்காட்சி இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்கி வரும் ஆக. 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பொருள்காட்சியின் முக்கிய நிகழ்வாக ஆடி அமாவாசை நாளில் பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை (ஜூலை 31) காலையில் நடைபெறுகிறது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளத்திலிருந்தும் வருகை தரும் பக்தர்கள் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்து வழிபடுவர்.
இதையொட்டி குழித்துறை ஸ்ரீ மகாதேவர் கோயில் சேவா சங்க அறக்கட்டளை சார்பில் மகாதேவர் கோயில், அருகிலுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகில் 2 பிரமாண்டப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாமிரவருணி ஆற்றில் படித்துறை பகுதியில்தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பெண்கள் பலி தர்ப்பணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொருள்கள் பாதுகாப்பாக வைக்கவும் தனி இட வசதி, ஹோமம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்தார். இதையொட்டி, புதன்கிழமை (ஜூலை 31) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.