முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மார்த்தாண்டத்தில் மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 78 பேர் கைது
By DIN | Published On : 30th July 2019 07:10 AM | Last Updated : 30th July 2019 07:10 AM | அ+அ அ- |

மார்த்தாண்டத்தில் பம்மம் பகுதியில் அணுகு சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 78 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பம்மம் - வெட்டுவெந்தி இடையே மார்த்தாண்டம் மேம்பாலத்தின் தரைவழியில் நிலம் ஆர்ஜிதம் செய்து முகப்புச் சாலையை போக்குவரத்துக்கு வசதியாக விரிவாக்கம் செய்ய வேண்டும்; இந்த வழியாக அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வேண்டும்;
அப்பகுதியில் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்த்தாண்டத்தில் பம்மம் பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் மார்த்தாண்டம் வட்டாரச் செயலர் வீ. அனந்தசேகர் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. மாதவன், வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள் ஈ. பத்மநாபபிள்ளை, ஏ. வின்சென்ட், குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவர் ஏ.எம்.வி. டெல்பின், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் முருகன், சர்தார்ஷா மற்றும் 8 பெண்கள் உள்ளிட்ட 78 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால், மார்த்தாண்டம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.