Enable Javscript for better performance
கருங்கல்-இரவிபுதூர்க்கடை சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்: கிள்ளியூர் எம்.எல்.ஏ- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல்-இரவிபுதூர்க்கடை சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்: கிள்ளியூர் எம்.எல்.ஏ

    By DIN  |   Published on : 04th June 2019 09:11 AM  |   அ+அ அ-   |    |  

    பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ள கருங்கல் - இரவிபுதூர்க்கடை சாலையை சீரமைக்க வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்போவதாக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கருங்கல் - இரவிபுதூர்கடை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் கருங்கல் ராஜீவ் சந்திப்பிலிருந்து எட்டணி சந்திப்பு வரை 3 கி.மீ. தொலைவுக்கு சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் இல்லாதது, சாலையை சரியான முறையில் பராமரிக்காதது போன்ற காரணங்களால், இந்தச் சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. 
    இதனால், சாலையைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நேரிடுகின்றன.
    இதையடுத்து, கருங்கல் ராஜீவ் ஜங்சன் முதல் எட்டணி வரை சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் ஓடை அமைத்து, சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, எனது தலைமையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கருங்கல் ஆட்டோ நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
    அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மே, 2018-க்குள் சாலை முழுமையாக சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் குழித்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் உறுதியளித்தார்.
    ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நெடுஞ்சாலை துறை இச்சாலையை சீரமைக்கவில்லை. மேலும், இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, முதல்வர், தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் பலமுறை மனு அளித்துள்ளேன். எனினும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சட்டப்பேரவை உறுப்பினர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    kattana sevai