குமரியில் கொட்டித் தீர்க்கும் மழை: கடல் கொந்தளிப்பால் வீடுகள் இடிந்தன": பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 10 அடியை எட்டியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 ஆவது நாளாக புதன்கிழமை மழை நீடித்தது. மேலும், கடல் கொந்தளிப்பு காரணமாக வீடுகள் இடிந்தன. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 ஆவது நாளாக புதன்கிழமை மழை நீடித்தது. மேலும், கடல் கொந்தளிப்பு காரணமாக வீடுகள் இடிந்தன. 
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 8ஆம் தேதி தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.  கேரளத்தில் கன மழையாக உருவெடுத்துள்ள நிலையில், திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோரம் மற்றும் அணைப் பகுதிகளில் சாரலாக நீடித்து வந்தது. கோடை வெயிலின் தாக்கம் முற்றிலும் தணிந்து, குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷ்ணத்துக்கு பருவ நிலை மாறியது. 
கட்டுப்பாட்டு அறை: இதனிடையே, அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக குமரியில் மழை வலுவடைந்து, மாவட்டம் முழுவதும் பரவலாக கொட்டித் தீர்த்து வருகிறது. 5ஆவது நாளாக மழை நீடித்த நிலையில்,  மலைக் கிராமங்களில் வெள்ளப் பாதிப்பை தடுக்கவும், வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கவும் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு, வருவாய், பொதுப்பணி மற்றும்  காவல் துறைகளின் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் நகரில் புதன்கிழமை அதிகாலை முதல் மழை விட்டு, விட்டு பெய்ததால் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி பள்ளிக்குச் சென்றனர். கோட்டாறு சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு சென்றன. குழித்துறை ஆற்றில் வெள்ளம்  கரை புரண்டு ஓடுகிறது. பரளியாறு, வள்ளியாறு, பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்மட்டம் உயர்வு: கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல்,  இரணியல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை நீடித்து வருகிறது. மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 9.40 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 696 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன் நீர்மட்டம் இரவுக்குள் 10 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 33.95  அடியாக உள்ளது. அணைக்கு 572 கன அடி நீர் வருகிறது. அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கன்னிப்பூ சாகுபடிக்கான நாற்றங்கால் தயாராக உள்ள நிலையில், அடுத்த கட்ட விவசாயப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இனிடையே, தொடர் மழையால் தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ராட்சத மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததால், வடசேரி பகுதியில் மின்தடை ஏற்பட்டது.  தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கி வரும் முக்கடல் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அந்த அணையின் நீர்மட்டம் மைனஸ் அளவிலிருந்து விடுபட்டு வருகிறது.
கடல் கொந்தளிப்பு: மேலும்,  வாயு புயல் காரணமாக குமரியின் மேற்கு கடற்கரையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வள்ளவிளை கடலோர கிராமத்தில் கடல் கொந்தளிப்பால் 20 வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் 10 வீடுகள் முற்றிலும் இடிந்தன. வீடுகளில் வசித்தவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். நீரோடி பேருந்து நிறுத்தம் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வள்ளவிளை, நீரோடி பகுதிகளில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com