வளர்ச்சித் திட்டங்களில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

தமிழக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.

தமிழக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுக்கு அக்கறை இல்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
இது குறித்து, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைபோல் மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் பாஜக பெரிய வெற்றி பெற்றுள்ளது.  மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே மத்திய பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.  நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நம் மாநிலத்தில் அந்தத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.  
தமிழகத்தில் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 
உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டும், கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை. அங்குள்ளஅனைத்து அணைகளும் நிரம்பி, தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்படும்போதுதான் காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கடந்த 7 ஆண்டுகளாக டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது. மாநில அரசு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகம்தான். மக்களைச் சந்திக்க தமிழக அரசு அஞ்சுகிறது  என்றார் அவர். 
முன்னதாக,  சாமிதோப்புக்கு வந்த முத்தரசனை பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்றார். அங்கு, செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியது: தமிழகத்தில் பாஜகவை நிராகரித்ததுபோல அதிமுகவையும் மக்கள் நிராகரித்து விட்டனர். அதனால், ஆட்சியில் தொடர அதிமுகவுக்கு தார்மிக உரிமையில்லை.
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது உள்கட்சிப் பிரச்னை. அதற்கான தீர்வை அவர்கள்தான் காணவேண்டும். ஆனால், அதைத் தீர்ப்பதுபோன்று பாஜக பாசாங்கு செய்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 2021 வரை முதல்வராக நீடிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளைத் தவிர,மாநில வளர்ச்சித் திட்டம் உள்பட வேறு எதைப்பற்றியும் கவலையில்லை. தமிழகத்தின் நலனுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் திட்டம், புயல் பாதிப்பு போன்றவற்றில் தமிழகத்தின் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியையும் வழங்கவில்லை. தமிழக மக்களை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு தொடர்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com