சீரமைக்கப்பட்ட சாலை 3 நாள்களில் சேதம்: பெண் அதிகாரியை முற்றுகையிட்ட மக்கள்
By DIN | Published On : 14th June 2019 06:42 AM | Last Updated : 14th June 2019 06:44 AM | அ+அ அ- |

குழித்துறை அருகே சாலை சீரமைக்கப்பட்ட மூன்றே நாளில் சேதமடைந்ததையடுத்து, சாலைப் பணியை மேற்பார்வையிட வந்த பெண் அதிகாரியை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
குழித்துறை ஸ்ரீதேவிகுமரி கல்லூரி அருகே கொற்றாடை பகுதியிலிருந்து பழவார் வழியாக குழித்துறை சந்திப்பு செல்லும் சாலை, நீண்ட நாள்களுக்கு பிறகு ஊரக வளர்ச்சித்துறையால் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 3 நாள்களுக்கு முன்பு தார்தளம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து சாலையில் ஒரு பகுதியில் வியாழக்கிழமை கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் சீரமைக்கப்பட்ட 3 நாளிலேயே தார்தளம் சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்பட்டன. தரமற்ற முறையில் இப்பணிகள் மேற்கொண்டதாலேயே இச்சாலை சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராணியை பொதுமக்கள் முற்றுகையிட்டு, தரம்குறைவாக சாலைப் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து பழுதடைந்த சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.