அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் ஜூன் 21இல் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 14th June 2019 06:44 AM | Last Updated : 14th June 2019 06:44 AM | அ+அ அ- |

குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அரசு ரப்பர் கழக அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.
சிஐடியூ தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் எம். வல்சகுமார் தலைமை வகித்தார். பரமேஸ்வரன் (ஐஎன்டியூசி), ஞானதாஸ் (ஜனதா தளம்), ராஜேந்திரன் (பிஎம்எஸ்), சிவநேசன் (தொமுச-கூட்டமைப்பு), நடராஜன், ஜோசப் (தொமுச), சந்திரகுமார், பாபு (சோனியா-ராகுல் சங்கம்), பி. நடராஜன், ஏ. வேலப்பன், ஆபிரகாம், சசிதரன் (சிஐடியூ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அரசு ரப்பர் கழக கீரிப்பாறை கோட்டத்தில் ரப்பர் பால் கெட்டுப் போனது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரப்பர் கழகத் தொழிலாளர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். ரப்பர் கழகத்தில் மறு நடவு செய்துள்ள ரப்பர் மரக்கன்றுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 21ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யவும், அனைத்து கோட்ட அலுவலகங்கள் மற்றும் கீரிப்பாறை ரப்பர் ஆலை முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.