கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு

கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை பகுதிகளை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை பகுதிகளை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மேற்கு கடற்கரைப் பகுதிகளான நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, பூத்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் கடல்நீர் உள்புகுந்ததால் நீரோடி பகுதியில் உள்ள மீன் விற்பனை தளம் சேதமடைந்ததுடன் அருகிலுள்ள தேவாலயமும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று மார்த்தாண்டன்துறை பகுதியில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயம், வள்ளவிளை பகுதியில் உள்ள புனித மரியன்னை தேவாலயம் அருகிலும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை பகுதிகளை கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்தகுமார், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அப்பகுதி மீனவப் பிரதிநிதிகள், பங்குத்தந்தைகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர். 
மார்த்தாண்டன்துறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது,  அப்பகுதிக்கு பத்மநாபபுரம் கோட்டாட்சியர் சரண்யா அரி, மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் தர்சியா, கிள்ளியூர் வட்டாட்சியர் கோலப்பன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்தனர்.
தொடர்ந்து கோட்டாட்சியர் எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். 
அப்போது அவர், கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்டன்துறை பகுதியில் முதல்கட்டமாக 16 லாரி பாறை கற்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
இதுகுறித்து ஹெச். வசந்தகுமார் எம்.பி. கூறியது: கடலரிப்பால் பாதிக்கும் நிலையில் உள்ள மார்த்தாண்டன்துறை தேவாலயத்தை பாதுகாக்க வேண்டும். அதற்காக இப்பகுதியில் 90 மீட்டர் நீளத்துக்கு கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க கூடுதல் பாறைகற்கள் தேவைப்படுகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com