குமரி கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் நாளை நிறைவு: ஆயத்தப் பணிகளில் மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக் காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவு பெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக் காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அன்று முதல் விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன.
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவகாலங்களில் விசைப் படகுகளில் மீன் பிடிப்பதற்கு, ஆண்டுதோறும் 60 நாள்கள் தடைவிதிக்கப்படுகிறது. 
இந்த மீன்பிடி தடைக் காலம், குமரி மாவட்டத்தில் 2 பருவங்களாக கடைப்பிடிக்கப்படுகிறது. கன்னியாகுமரி, சின்னமுட்டம் உள்ளிட்ட கிழக்குக் கடலோரப் பகுதியில், கடந்த ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது. மேற்குக் கடற்கரை பகுதியான ராஜக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனயம், தூத்தூர், நீரோடி உள்ளிட்ட பகுதிகளில், மே 31 ஆம் தேதி நள்ளிரவு முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு, தற்போது 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். முதல் பருவ தடைக் காலம், ஜூன் 15 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 2 மாத தடைக் காலத்தில், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் விசைப் படகுகளை நங்கூரமிட்டு, பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், மீன் வலைகளை பின்னுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தடைக் காலம் நிறைவுபெறுவதால், விசைப் படகுகளை தயார்செய்யும் இறுதிகட்டப் பணிகளில் சின்ன முட்டம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். வழக்கம்போல, அதிகாலை 5 மணிக்கு விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல உள்ளதால், மீன்களை பதப்படுத்தும் ஐஸ் கட்டிகளை தயார்படுத்துதல், எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
2 மாதங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டு, கரைதிரும்பியதும், சனிக்கிழமை இரவு சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் வியாபாரிகள் கூட்டத்தால் களைகட்டும்.
இங்கு கிடைக்கும் மீன்களை வாங்க, கேரள மாநிலம் மற்றும் நெல்லை, குமரி மாவட்ட மீன் வியாபாரிகள் குவிவார்கள். கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு மீன்வரத்து அதிகமாக இருக்கும் என்றும், மீனுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் விசைப்படகு உரிமையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சுமார் 4.4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும் என்பதால், ஜூன் 14 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என  ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com