ஜமாபந்தி: தோவாளையில் 130 கோரிக்கை மனுக்கள்
By DIN | Published On : 14th June 2019 06:47 AM | Last Updated : 14th June 2019 06:47 AM | அ+அ அ- |

தோவாளை வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 130 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
தோவாளை வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், அழகியபாண்டியபுரம் குறுவட்டத்துக்குள்பட்ட அழகியபாண்டியபுரம், காட்டுப்புதூர், அனந்தபுரம், திடல், அருமநல்லூர், தடிக்காரன்கோணம், ஞாலம், தெரிசனங்கோப்பு ஆகிய 8 கிராமங்ககளைச் சேர்ந்த மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது 130 மனுக்கள் பெறப்பட்டன. கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சியரால் தணிக்கை செய்யப்பட்டது.
இதில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சுரேஷ்குமார், வட்டாட்சியர்கள் சொக்கலிங்கம் பிள்ளை (தோவாளை), அருளரசு (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவட்டாறில்...
திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 24 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
புதிதாக தொடங்கப்பட்ட திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல் ஜமாபந்தி நிகழ்ச்சியில், புதன்கிழமை திருவட்டாறு குறுவட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து 445 மனுக்கள் பெறப்பட்டன. இரண்டாவது நாளான வியாழக்கிழமை குலசேகரம் குறுவட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து 485 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ரா. ரேவதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் 24 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. 5 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. 15 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வட்டாட்சியர் பி. சுப்பிரமணியன், உசூர் மேலாளர் (குற்றவியல்) கண்ணன், துணை வட்டாட்சியர்கள் மரகதவள்ளி, விஜயகுமார், திருவட்டாறு வருவாய் ஆய்வாளர் ஆல்பர்ட், சமுகப் பாதுகாப்பு தனி வட்டாட்சியர் அருள்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.