குமரியில் ரூ. 50 லட்சத்தில் 125 அடி உயர தேசிய கொடிக் கம்பம்: ஏ.விஜயகுமார் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
By DIN | Published On : 18th June 2019 10:08 AM | Last Updated : 18th June 2019 10:08 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட்டில் ரூ. 50 லட்சம் மதிப்பில் 125 அடி உயரத்தில் அமையவுள்ள தேசிய கொடி கம்பத்துக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
நாட்டின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் சூரியஉதயம், சூரியஅஸ்தமனம் ஆகிய இரண்டையும் நேரடியாக காணலாம் என்பதால் உலகப் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இதனிடையே, கன்னியாகுமரியை தனித்துவமாக அடையாளப்படுத்தும் நோக்கத்தில் நான்குவழிச் சாலை தொடங்கும் ஜீரோ பாயின்ட் பகுதியில் 125 அடி உயரத்தில் தேசியக் கொடிக் கம்பம் அமைக்க மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 125 அடி உயர தேசிய கொடி கம்பத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஏ.விஜயகுமார் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியது: சர்வதேச புகழ்பெற்று விளங்கும் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். எனவே, உலகின் 8 ஆவது அதிசயமாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதையடுத்து, இங்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் தேசியக் கொடிக் கம்பமும், அதனைச் சுற்றிலும் ரூ. 30 லட்சம் செலவில் 24 மணி நேரமும் ஒளிரும் அதிநவீன மின்விளக்குகள் பொருத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கடல் சங்கமம் பகுதியில் பக்தர்கள் நீராடும் வகையில் ரூ. 25 லட்சம் செலவில் நவீன படித்துறை மைக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் ஏ.ஞானசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் கனகராஜன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதி சங்க நிர்வாகிகள் ராஜ்கோமஸ், ஏ.அல்போன்ஸ், கென்னடி, நாகர்கோவில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சி.ராஜேஷ், விவேகானந்தா கல்லூரி கல்விக் கழக செயலர் சி.ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.