குளச்சல் அருகே கடலில் மூழ்கி மாயமான 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
By DIN | Published On : 19th June 2019 10:16 AM | Last Updated : 19th June 2019 10:16 AM | அ+அ அ- |

குளச்சல் அருகே கடலில் மூழ்கி மாயமான 2 சிறுவர்களின் சடலங்களை கடலோரக் காவல்படையினர் மீட்டனர். இதனால், கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
குமரி மாவட்டம், குளச்சலை அடுத்த மண்டைக்காடுபுதூர் கடற்கரையில் கடந்த 16 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மிக்கேல் வேதநாயகம் மகன் சச்சின் (14), அவரது நண்பர்கள் ஆன்றோ ரக்ஷன்(11), ரஹீத் (13), சகாய ரெகின் (12) உள்ளிட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கடலில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது 4 சிறுவர்களையும் கடல் அலை இழுத்துச் சென்றது.
இதில், சச்சின், ஆன்றோ ரக்ஷன் ஆகியோரை மீனவர்கள் மீட்டனர். எனினும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் சச்சின் உயிரிழந்தார். ஆன்றோ ரக்ஷனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடல் அலை இழுத்துச் சென்ற சகாய ரெகின், ரஹீத் ஆகியோரை குமரி கடலோரக் காவல் குழும ஆய்வாளர் சைரஸ் தலைமையில் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்திய கடற்படை உதவியுடன் திங்கள்கிழமை சிறுவர்களை தேடியும் பலனில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சின்னவிளை கடலில் சகாயரெகினின் சடலம் மிதந்துள்ளது. இதைப் பார்த்த மீனவர்கள் கடலோரக் காவல் படையினருக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார், சகாய ரெகினின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல, செவ்வாய்க்கிழமை காலை சிறுவன் ரஹீத்தின் சடலம் குளச்சல் கடலில் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடலோரக் காவல்படையினர், மீனவர்கள் உதவியுடன் ரஹீத்தின் சடலத்தை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தில், ஏற்கெனவே இறந்த சச்சினுடன் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.