கன்னிப்பூ பருவ சாகுபடி: ஜூன் 26இல் பேச்சிப்பாறை அணையைத் திறக்க பரிந்துரை

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ நெல் சாகுபடிக்காக, பேச்சிப்பாறை அணையை இம்மாதம் 26 ஆம் தேதி

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ நெல் சாகுபடிக்காக, பேச்சிப்பாறை அணையை இம்மாதம் 26 ஆம் தேதி திறக்க வேண்டுமென்று அரசுக்கு பொதுப்பணித் துறை  பரிந்துரை செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை பாசனம் மூலமே விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதில், கன்னிப்பூ, கும்பப்பூ என இரு பருவ சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு அணைகளில் போதிய நீர் இல்லாததால்,  அணை திறக்கப்படவில்லை. 
இந்நிலையில், கன்னிப்பூ பருவ சாகுபடி குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (நீர் ஆதாரம்) வேத அருள்சேகர் தலைமை வகித்தார். இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, பத்மதாஸ் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, பாசனத்துக்கு அணையை உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் வேதஅருள்சேகர் கூறியது:
பேச்சிப்பாறை அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் 20 அடி வரை மட்டும் தண்ணீரைச் சேமிக்க முடியும். தற்போது அணையில் 11.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக அணையை திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் 1500  மில்லியன் கன அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும். தற்போது 1,450  மில்லியன் கன அடி நீர் உள்ளது. 
மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், 2 தினங்களுக்குள் அணை 1500 மில்லியன் கன அடியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், அணையை இம்மாதம் 26 ஆம் தேதி திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அணை திறப்பு குறித்து அரசு முறையாக அறிவிக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com