குமரியில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்

குமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவந்த சாரல் மழை ஓய்ந்து, மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவந்த சாரல் மழை ஓய்ந்து, மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.
கேரளத்தில் கடந்த 8ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய, குமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், வெப்பத்தின் தாக்கமும் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது.
மேலும்,  "வாயு' புயல் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்ததால், குமரி மாவட்டத்தில் சாரலுடன் கூடிய பலத்த மழை பெய்துவந்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வந்தது.
இந்நிலையில், "வாயு' புயல் திசைமாறிச் சென்றதைத் தொடர்ந்து, மழையின் தாக்கமும் குறைந்தது. அவ்வப்போது பெய்து வந்த சாரல் மழையும் ஓய்ந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
குறிப்பாக, கடந்த 3 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலையிலிருந்தே கொளுத்த தொடங்கும் வெயில் மாலை 4 மணியையும் தாண்டி சுட்டெரித்து வருகிறது. மாலையில் மழைக்கான அறிகுறி ஆங்காங்கே தென்பட்டாலும் மழை பொழியவில்லை. அதேவேளையில், இரவு கடும் உஷ்ணம் நிலவுகிறது.
மழை பெய்துவந்ததால் உற்சாகம் அடைந்த விவசாயிகளும்,  குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில், மீண்டும் வெயில் வாட்டிவதைக்கத் தொடங்கியுள்ளது. 
அணைகளின் நீர்மட்டம்: செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை 11.50 அடி, பெருஞ்சாணி 37.10 அடி, சிற்றாறு(1)  7.48 அடி, சிற்றாறு (2) 7.57 அடி, பொய்கை 8.40 அடி, மாம்பழத்துறையாறு 45.11 அடி என்ற அளவில் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 18.70 அடியாக உள்ளது.  மழை தொடர்ந்து நீடித்திருந்ததால் முக்கடல் அணை பிளஸ் நிலைக்கு வந்திருக்கும். தற்போது நாகர்கோவில் நகரில் 15 நாள்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com