சாகித்ய அகாதெமி விருதில் தமிழ் இடம்பெற வேண்டும்: குளச்சல் மு. யூசுப் வலியுறுத்தல்

சாகித்ய அகாதெமி நிறுவனம் தனக்கு வழங்கிய விருதில், ஹிந்திக்கு பதிலாக, தமிழில் எழுத்துகளைப்

சாகித்ய அகாதெமி நிறுவனம் தனக்கு வழங்கிய விருதில், ஹிந்திக்கு பதிலாக, தமிழில் எழுத்துகளைப் பொறித்துத் தரவேண்டும் என, எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை பூர்வீகமாகக் கொண்டவர் மு. யூசுப். நாகர்கோவிலில் வசித்துவரும் இவர், மலையாளத்திலிருந்து பல படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். பள்ளிப் படிப்பையே தாண்டாத இவர், தொடக்கத்தில் மளிகைக் கடை நடத்தினார். அங்கு பொட்டலம் மடிக்கப் பயன்படுத்தும் காகிதங்களின் வாயிலாக மலையாளம் கற்றார். ஒருகட்டத்தில் இலக்கியங்கள் படைக்கும் அளவுக்கு திறமைபெற்றார். மலையாளத்தில் இந்துகோபன் எழுதிய நாவலை "திருடன் மணியன்பிள்ளை' என்ற தலைப்பில் தமிழுக்கு மொழி பெயர்த்தார் யூசுப். இந்த நாவல் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு பிரிவுக்கான (தமிழ்) சாகித்ய அகாதெமி விருதை அவருக்குப் பெற்றுத்தந்தது.
இந்நிலையில், சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு, திரிபுரா தலைநகர் அகர்தலாவில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் விருது அறிவிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் விருதுகளை வழங்கினார்.
கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவில் குளச்சல் மு. யூசுப்புக்கும் விருது வழங்கப்பட்டது.  விருதைப் பெற்றுக்கொண்ட  அவர் தனக்கு வழங்கப்பட்ட விருதில் உள்ள, தனக்கு தெரியாத ஹிந்தி எழுத்துகளை மாற்றி, தமிழில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதை சாகித்ய அகாதெமி பரிசீலிப்பதாகக் கூறியுள்ளதாக, குளச்சல் மு. யூசுப் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com