குமரி அணைப் பகுதிகளில் மிதமான மழை
By DIN | Published On : 23rd June 2019 01:05 AM | Last Updated : 23rd June 2019 01:05 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதி, மலையோரங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. எனினும், தொடர்ந்து மழை பெய்யவில்லை. இதனால், பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உள்ளது. இதனிடையே, கடந்த 2 நாள்களாக இம்மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. சனிக்கிழமை அணைகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. களியக்காவிளை பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. கேரளத்தில் அண்மையில் பருவமழை தொடங்கியதை அடுத்து களியக்காவிளை வட்டாரத்திலும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை களியக்காவிளை மற்றும் மருதங்கோடு, மேல்புறம், குளப்புறம், கோழிவிளை, படந்தாலுமூடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இப்பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.