சவூதியில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கக் கோரி உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 25th June 2019 05:52 AM | Last Updated : 25th June 2019 05:52 AM | அ+அ அ- |

சவூதிஅரேபியாவில் தவிக்கும் இருவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மரிய மிக்கேல்ராஜ் (30), குமார் (35). இருவரும் சவூதிஅரேபியா நாட்டில் ரியாத் எனும் இடத்திற்கு வேலைக்கு சென்றனராம். காரங்காடு பகுதியை சேர்ந்த முகவர் ஒருவர் இருவரையும் வேலைக்கு அழைத்து சென்றாராம். இவர்களுக்கு வழங்கப்பட்ட விசா முடிவடைந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனராம்.
இருவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்களின்
குடும்பத்தினர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, விசாரிக்க ஆட்சியர், போலீஸாருக்கு உத்தரவிட்டார். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அந்தோணிமுத்து தலைமையில் அவர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏமாற்றிய முகவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெளிநாட்டில் சிக்கி தவித்துவரும் இருவரையும் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.