பேச்சிப்பாறையில் ரூ. 1.50 கோடியில் தேனீ மகத்துவ மையம்: தேனீ வளர்ப்போர் மகிழ்ச்சி

குமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் ரூ. 1.50 கோடியில் "தேனீ மகத்துவ மையம்" அமைப்பதற்கான

குமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் ரூ. 1.50 கோடியில் "தேனீ மகத்துவ மையம்" அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதால், தேனீ வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தேன் உற்பத்திக்கு பெயர்பெற்றது. இங்குள்ள மார்த்தாண்டம் தமிழகத்தின் தேன் கிண்ணம் என வர்ணிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்ந்த முக்கிய தொழிலாக தேனீ வளர்ப்பு உள்ளது. சுமார் 10 ஆயிரம் தேனீ வளர்ப்போர் உள்ளனர். 
குமரி மாவட்ட தேனீ வளர்ப்போரின் 2 லட்சம் தேனீ குடும்பங்கள் மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய 2 ஆயிரம் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், தேனீ ஆராய்ச்சி மையம்  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேனீ மகத்துவ மையம்: இந்நிலையில் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி மைய வளாகத்தில், ரூ. 1.50 கோடியில் தேனீ மகத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இங்கு தேனீ வளர்ப்பு  பயிற்சி மையம், மாதிரி தேனீ வளர்ப்பு பண்ணை, வீரியமுள்ள ராணி தேனீக்கள் உருவாக்கம், தேன் பதப்படுத்தும் மையம், தேன் பரிசோதனை மற்றும் தர ஆய்வு மையம், மலர்த் தோட்டம் உள்ளிட்டவை அமையவுள்ளன. 
இதுகுறித்து மாவட்ட தோட்டக் கலை துறை துணை இயக்குநர் அசோக் மேக்ரின் கூறியது: தமிழகத்தில் குமரி மாவட்டம் தேன் உற்பத்திக்கு உகந்த மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழில்முறையில் தேனீ வளர்த்து தேன் உற்பத்தி செய்கின்றனர். இதன்மூலம், அருமருந்தான தேன் கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில், தேனீ வளர்ப்புத் தொழிலை மேம்படுத்தும் வகையில், தேசிய தோட்டக் கலை இயக்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ. 1.50 கோடியில் தேனீ மகத்துவ மையம் அமையவுள்ளது.
இம்மையத்திற்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தளவாடப் பொருள்கள் மற்றும் தேனீக்களை அளிக்கும் வகையில் செவ்வாய்கிழமை (ஜூன் 25) ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அமையுள்ள தேனீ வளர்ப்புப் பயிற்சி மையத்தில் ஒரு வகுப்புக்கு 50 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதேபோல, ராணி தேனீ உற்பத்தி மையத்தில் வீரியமிக்க ராணி தேனீக்கள் உற்பத்தி செய்யப்பட்டு தேனீ வளர்ப்போருக்கு வழங்கப்படவுள்ளது. இங்குள்ள தேன் பதப்படுத்தும் மையத்தில் தேன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பதுடன், தேனீ வளர்ப்போர் கொண்டுவரும் தேன் பதப்படுத்தி கொடுக்கப்படும். மேலும், தேன் பரிசோதனை மற்றும் தர ஆய்வு மையத்தில் தேனீ வளர்ப்போர் எடுத்துவரும் தேனை பரிசோதனை மற்றும் தர ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் தேனீ மகத்துவ மையம் செயல்படத் தொடங்கும் என்றார் அவர்.
தேனீ வளர்ப்போர் மகிழ்ச்சி: தேனீ மகத்துவ மையம் அமையவிருப்பது குறித்து குமரி மாவட்ட தேனீ வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து முன்னோடி தேனீ வளர்ப்பாளரும், தேனீ வளர்ப்பு பயிற்சியாளருமான கொட்டூர் பி. ஹென்றி கூறியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் தொழிலாக தேனீ வளர்ப்புத் தொழில் உள்ளது. இந்நிலையில், தேனீக்களுக்கு ஏற்படும் நோயால் தேன் உற்பத்தி பாதிப்பு, பருவநிலை மாற்றங்களால் தேனீக்கள் அழியும் நிலை, தேனுக்கு போதிய விலை இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் தேனீ வளர்ப்போர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துவருகிறோம். இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு நான் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தேன் தொழில் சார்ந்து  மத்திய தேனீ வாரியத்திற்கு ரூ. 12.92 கோடியிலான திட்டப் பரிந்துரைகளை வேளாண் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளதுடன், அதன் விவரங்களையும் எனக்கு வழங்கியுள்ளது. 
இந்நிலையில், பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையம் அமையவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் தேனீ வளர்ப்போர் பல்வேறு நன்மைகளை அடைய முடியும். தேனீ வளர்ப்பில் மேலும் ஏராளமானோர் ஈடுபட வாய்ப்பும் ஏற்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com