விடுமுறை நாளில் கிராம சபைக் கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
By DIN | Published On : 25th June 2019 05:48 AM | Last Updated : 25th June 2019 05:48 AM | அ+அ அ- |

கிராம சபைக்கூட்டத்தை விடுமுறை நாளில் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பி.சசி தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தமிழகம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தேசிய விடுமுறை தினங்களில்தான் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை தேசிய விடுமுறை தினத்தை தவிர்த்து வேலை நாளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், கிராம மக்கள் பங்கேற்று தங்கள் பகுதி கோரிக்கையை வலியுறுத்துவர். ஆகவே, வேலை நாளில் கிராம சபைக் கூட்டம் நடத்தினால் கிராம மக்கள்
பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே, கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி விடுமுறை நாளில் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.