குழித்துறை ரயில் நிலையத்தில் தொலைதூர விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு
By DIN | Published On : 28th June 2019 07:21 AM | Last Updated : 28th June 2019 07:21 AM | அ+அ அ- |

குழித்துறை ரயில் நிலையத்தில் தொலைதூர விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் அனுமதிக்க கன்னியாகுமரி எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக குழித்துறை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வருவாய் அடிப்படையில் என்எஸ்ஜி-5 பிரிவு ரயில் நிலையமாகவும், ஆண்டு வருவாய் ரூ. 7.94 கோடியாகவும் உள்ளது. இங்கிருந்து தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி - ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில், நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர ரயில், கன்னியாகுமரி திப்ரூகர் வாராந்திர ரயில், நாகர்கோவில் - ஷாலிமர் வாராந்திர ரயில், திருநெல்வேலி காந்திதாம் ஹிம்சாபர் வாராந்திர ரயில் உள்ளிட்டவை இங்கு நிறுத்தம் இல்லாமல் இயங்கி வருகிறது.
ஒரு ரயில் நிலையத்துக்கு புதிதாக ரயில்கள் நிறுத்தம் வேண்டுமென்றால், தற்போது இயக்கப்பட்டு வரும் தொலைதூர விரைவு ரயில்களில் 500 கி.மீட்டருக்கு மேல் 40 பயணச்சீட்டுகள் சராசரியாக விற்பனையானால் மட்டுமே நிறுத்தம் அனுமதிக்கப்படும்.
ரயில்வே துறையால் புதிய ரயில்கள் இயக்கப்படும்போது அனுமதிக்கப்படும் நிறுத்தங்கள் நிரந்தர நிறுத்தங்களாகவே கொள்ளப்படும். மேலும் இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களுக்கு நிறுத்தம் கோரினால் ரயில்வே வாரியத்தால் விரைவில் நிறுத்தம் அனுமதிக்கப்படமாட்டாது. அதையும் மீறி தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கும் போது, அந்த ரயிலால் ரயில்வே துறைக்கு வரும் வருவாயை கணக்கிட்டு, நிரந்தர நிறுத்தம் அனுமதிக்க வேண்டுமா, வேண்டாமா என்று ரயில்வே வாரியம் முடிவு செய்யும்.
குமரி மாவட்டம் வழியாக இயக்கப்பட்டு வரும் திருநெல்வேலி - ஜாம்நகர், நாகர்கோவில் - காந்திதாம் ரயில்கள் நாகர்கோவிலுக்கு அடுத்து திருவனந்தபுரத்தில் நின்று செல்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சசிதரூர் மேற்கொண்ட முயற்சியால், திருநெல்வேலி- ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில் கேரள மாநிலப் பகுதியான பாறசாலை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தின் இடையே உள்ள ரயில் நிலையங்களில் அதிக வருவாய் தரும் குழித்துறை ரயில் நிலையத்தில் நிற்காமல், பாறசாலை ரயில் நிலையத்தில் நின்று செல்வது குமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாகவே உள்ளது.
எனவே நாகர்கோவில் - காந்திதாம், திருநெல்வேலி - ஜாம்நகர் ரயில்களுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க, கன்னியாகுமரி தொகுதி எம்.பி. ஹெச். வசந்தகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.